முக்கிய அதிகாரிகளை மாற்றிய தேர்தல் ஆணையம்

முக்கிய அதிகாரிகளை மாற்றிய தேர்தல் ஆணையம்

2 mins read
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் முக்கிய அதிகாரிகள் மாற்றம்
160bf400-d680-47ea-b12a-31e5d99bb54d
புதிய காவல்துறை ஆணையர் அபின் தினேஷ் மோடக். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சென்னை காவல்துறை ஆணையரைத் தலைமைத் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

அந்தப் பொறுப்பில் உள்ள திரு அருணுக்குப் பதில் புதிய காவல்துறை ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையோடும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகை​யில் ஏற்​கெனவே, விருதுநகர், நாமக்​கல், கரூர் உள்ளிட்ட எட்டு மாவட்ட எஸ்.​பி.க்​கள் மாற்​றப்​பட்​டனர்.

ஏப்ரல் 2ஆம் தேதி தலை​மைச் செயல​ராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமாரும், சட்​டம், ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்​கடராமன் மாற்றப்​பட்டு சந்​தீப் ராய் ரத்​தோரும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணையும் மாற்ற வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் பாஜக, தவெகவினர் மனு அளித்தனர்.

அதையடுத்து அருணுக்குப் பதிலாக சென்னை காவல் ஆணையராக, அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக்கை பணியமர்த்தித் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) இரவு உத்தரவிட்டது.

புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேபோல் மாநிலத்தின் உள்துறைச் செயலரை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் உள்துறைச் செயலராக மணிவாசனை நியமித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

தற்போது தமிழக அரசின் உள்துறைச் செயலராக இருந்த தீரஜ்குமாருக்கு, தேர்தல் தொடர்பான பணிகளை வழங்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.

டி.ஆர். பாலு கடிதம்

இதற்கிடையே, எந்தவிதப் புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

“இந்த நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை.

“மேலும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எவ்விதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அந்தப் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லை,” என்று திரு டி.ஆர்.பாலு கடிதத்தில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்