சென்னை: தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,200 கோடிக்கும் அதிகமான ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள், பரிசுப் பொருள்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளன.
இதனைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) தெரிவித்தார். பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மட்டும் ரூ.169.85 கோடி என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்ட ரூ.650.87 கோடி மதிப்புள்ள மதிப்புமிக்க உலோகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல, ரூ.306.34 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் ரூ.82.73 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
இவை தவிர, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு ரூ.2.95 கோடி என்றார் அதிகாரி.
தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 23ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
எல்லா சட்டமன்றத் தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தொடக்கம் முதல் ஏப்ரல் 20 வரை ரூ.1,212.74 கோடி மதிப்புள்ள பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் கிட்டத்தட்ட ரூ.495 கோடி, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்களுக்கு எவ்விதச் சிரமமோ இடையூறோ ஏற்படவில்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல்துறைப் பார்வையாளர்கள் மற்றும் 150 தேர்தல் செலவினப் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக அவர் விவரித்தார்.
மேலும், 83,875 காவல்துறையினரும் 40,427 பிற துறைப் பணியாளர்களும் தேர்தல் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் சொன்னார்.

