சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கானத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை (பிப்ரவரி 18) வெளியிட்டது.
இந்தியாவில் தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16ஆம் தேதி நடைபெறும்.
17 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியும் மீதமுள்ள 20 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 4ஆம் தேதியும் நிறைவடைவதால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளுக்கானத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக மாநிலங்களவை உறுப்பினர்களான என். ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, தம்பிதுரை, ஜி.கே. வாசன், பி. செல்வராசு உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடையவுள்ளது.
அம்மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதிப் பங்கீட்டின் போது சட்டமன்றத் தொகுதிகள் உடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் சேர்த்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

