சென்னை: தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
அதற்குள் விரிவான அளவில் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, பெயர்நீக்கம், திருத்தம், சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து அதிமுக ஆதரவாளர்கள் 13,000 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
அவ்வழக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) விசாரணைக்கு வந்தபோது, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தகவலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அந்த மறுஆய்வு நடவடிக்கையின்போது சத்தியநாராயணனின் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் ஆணையம் உறுதியளித்தது.
அதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைத் தாக்கல் செய்யுமாறும் உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இவ்வாண்டு பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின்போது 6.5 மில்லியன் பேரின் பெயர்களை நீக்கியது மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

