சென்னை: தமிழக மின்வாரியத்தின் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், கைப்பேசி அல்லது ‘டேப்லெட்’ கருவிகள் வாங்க, 10,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒரு முறை வீடுதோறும் சென்று கணக்கெடுப்பது வழக்கம். இதற்கான செயலி அவர்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, கண்ணாடி ஒளியிழைக் கம்பி ஒன்றும் வழங்கப்படுகிறது.
இந்தக் கம்பியின் மூலம் கைப்பேசியையும் மின்சார மீட்டரையும் இணைத்து விவரங்கள் சேகரிக்கப்படும்.
தங்கள் பணிக்காக சொந்த கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும் தங்களுக்கு பணி நிமித்தம் கைப்பேசி வழங்க வேண்டும் என்றும் கணக்கெடுப்பு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதை ஏற்று, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கைப்பேசி வாங்க ரூ.10,000 வழங்க தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேற்கொண்டு செலவாகும் தொகையை, ஊழியர்களே ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலர் சேக்கிழார் கூறுகையில், தரமான கைப்பேசி வாங்க ரூ.10,000 போதுமா எனத் தெரியவில்லை என்றும் இதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
எனவே, மின்வாரிய நிர்வாகமே கைப்பேசிக்கான முழுத் தொகையையும் மாதாந்தர இணையத் தொடர்புக்கான கட்டணத்தையும் தர வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.


