சாத்தனூர் அணை திறப்பு: எதிர்க்கட்சிகள் சாடல், அரசு விளக்கம்

2 mins read
0d48a713-f487-412d-a4d7-2213d655ed94
திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் தென்பெண்ணையாற்று வெள்ள நீர். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை திறப்பின் போது ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டதாகவும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி இருப்பதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

“சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது. அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் உயிர்ச்சேதத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அணை திறப்பின் மூலம் பெரிய பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படாமல் அரசு மக்களைப் பாதுகாத்தது,” என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) பார்வையிட்ட பழனிசாமி, வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்த போதும் திமுக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தினார். சாத்தனூர் அணையிலிருந்து முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பது உள்ளிட்ட நிர்வாகக் குளறுபடிகளே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளுக்கு காரணமெனவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். பாழாகிப்போன பயிர்களுக்கும் உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் முன்னறிவிப்பு இன்றி நள்ளிரவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

தென்பெண்ணை ஆறு ஓடும் நான்கு மாவட்டங்களிலும் ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள பகுதிகளிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளம் புகுந்ததால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும், கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்து விட்டன. இந்த இழப்புகளில் இருந்து மீள்வதற்கு அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகள் ஆகக்கூடும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக சாத்தனூர் வருகிறது. தொடங்கும் இடத்திலிருந்து சாத்தனூர் அணைக்கு வரும் வழி வரை அனைத்து இடங்களிலும் கடுமையான மழை பெய்வதால் காட்டாறுகள் உருவாகி அந்த நீரும், பாம்பாறு உள்ளிட்ட பல துணை நதிகளும் தென்பெண்ணை ஆற்றில்தான் இணைகின்றன.

தென்பெண்ணையில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2 லட்சம் கன அடிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுயுள்ளது. 1972ம் ஆண்டு தென்பெண்ணையில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்தது.

குறிப்புச் சொற்கள்