சென்னை: மத்திய அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகள் காரணமாக, சென்னையில் செவ்வாய்க்கிழமை (மே 6) காலை முதல் பரபரப்பு நிலவியது.
ஏற்கெனவே ஆளும் திமுக அமைச்சர்கள், அவர்கள் பொறுப்பு வகிக்கும் துறைகள் சார்ந்த அரசு அலுவலகங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனை நடத்தியிருந்தது.
இந்நிலையில், மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை முதல் சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இம்முறை மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண மோசடி, துறை சார்ந்த ஊழல்கள் தொடர்பாக பல திமுக அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி பொன்முடி, செந்தில் பாலாஜி, துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைதானார். சிறைக்கும் சென்றார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக் காரணமாக அவரால் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை மீண்டும் அமைச்சராக முடியாத நிலை காணப்படுகிறது.
மூத்த அமைச்சராக இருந்த பொன்முடியை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் மே 6ஆம் தேதி காலை சென்னையில் உள்ள விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு இச்சோதனை நடத்தப்பட்டது.
மேலும், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக இந்து தமிழ் ஊடகச்செய்தி தெரிவித்தது.
தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

