சென்னை: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின.
இது பழி வாங்கும் நடவடிக்கை என்றும் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் திமுக தலைமை கூறியுள்ளது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை சென்னை, திண்டுக்கல்லில் உள்ள அமைச்சரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. காலை ஏறக்குறைய 6.45 மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள அமைச்சரின் வீட்டுக்கு அதிகாரிகளும் மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த, துப்பாக்கி ஏந்திய 8 வீரர்களும் வந்ததாகவும் அதன் பிறகு சோதனை தொடங்கியதாகவும் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின் மகள் இந்திராணியின் திண்டுக்கல் வீட்டிலும் ஆறு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான செந்தில் குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
மூன்று வீடுகளிலும் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த திமுக நிர்வாகிகள் உடனடியாக அமைச்சரின் வீட்டின் முன்பு குவிந்தனர்.
இதனிடையே, சென்னை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஐ.பெரியசாமிக்குத் தொடர்புள்ள வேறு சில இடங்களையும் விட்டுவைக்காமல் அதிகாரிகள் தனித்தனிக் குழுவாகச் சென்று சோதனை மேற்கொண்டதாக மற்றொரு ஊடகச் செய்தி தெரிவித்தது.
குறிப்பாக, வத்தலக்குண்டு பகுதியில் அமைந்துள்ள பெரியசாமிக்குச் சொந்தமான ஆலையில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் சோதனை தொடங்கியது. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக, இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்தன.
பொன்முடி, துரைமுருகன், செந்தில் பாலாஜி என அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது அரசியல் களத்தில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் அறையிலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் இதன் காரணமாக, அவரது அறைக்குச் செல்லும் நுழைவுப்பகுதி மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, குறிப்பிட்ட ஓர் அறை பூட்டப்பட்டிருப்பதாகவும் அதற்கான சாவியை ஒப்படைக்க வீட்டில் இருந்தவர்கள் மறுத்ததாகவும் பரபரப்புச் செய்தி ஒன்று வெளியானது.
சாவி கிடைக்காததால் பூட்டை உடைத்து கதவைத் திறக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகவும் மற்றொரு தகவல் தெரிவித்தது.
அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும் அவரது மனைவியிடமும் அதிகாரிகள் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக முதற்கட்ட விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்தச் சோதனை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றத் தலைவர் கனிமொழி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளின் மூலம் திமுக அமைச்சர்கள் மீது மத்திய அரசு கணைகளைத் தொடுப்பதாகவும் எதிர்க்கட்சிகளை மிரட்ட இந்த அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.