சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை

கோப்புப் படம்: தி ஃபெடரல்

03 Nov 2026 - 6:27 pm

1 mins read

சென்னை: வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதிச் சட்டமன்ற உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை புதிய அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கடந்த 2016 முதல் 2021 வரை தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக சி. விஜயபாஸ்கர் மீது 2021ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை அடிப்படையாகக்கொண்டு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணையைத் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் மாதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கெனவே விஜயபாஸ்கர், அவரது மனைவியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளுக்காக தம்பதியரில் ஒருவர் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6)சென்னையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் என்றும் மற்றொருவர் அடுத்த வாரம் முன்னிலையாக வேண்டும் என்றும் அழைப்பாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்