தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

2 mins read
6faf7890-6f97-456e-abff-7970263b4f58
சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். - படம்: தமிழக ஊடகம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் 67.97 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வாக்குகள் சனிக்கிழமை (பிப்ரவரி 8) எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்றார். இதனால் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.

மாலை 4.45 மணியளவில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

தேர்தல் வெற்றி குறித்து பேசிய திமுக வேட்பாளர் சந்திரகுமார், “இந்தத் தேர்தல் முடிவுகள் தான் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, திமுகவுக்கு எதிரான வாக்குகள் நாதகவுக்கு கிடைத்துள்ளன,” என்று கூறினார்.

“மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்தோம். பிரசார ஊகத்தின் அடிப்படையில் திமுக வாக்கு வாங்கி அமைந்துள்ளது. திமுக எந்தக் காலத்திலும் யாரை கண்டும் பயப்படாது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே தேர்தலில் தோல்வியடைந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, “நாம் தமிழர் கட்சிக்கு இதனால் பின்னடைவு கிடையாது. கடந்த இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று வருவதால், இது பின்னடைவு கிடையாது. 2026ஆம் ஆண்டு திமுகவுக்கு நிச்சயமாக பின்னடைவு ஏற்படுத்தப்படும்.

“இந்த இடைத்தேர்தலில், திமுக கூடுதலான வாக்குகளை வாங்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் நிராகரித்து உள்ளனர். கள்ள ஓட்டுகள்தான், திமுக கூடுதலான வாக்குகள் வாங்குவதற்கான காரணம். ஈரோடு இடைத்தேர்தலை 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்த்ததால், திமுக தலைமைக்கு அச்சம் வந்துள்ளது. எனவே, 2026ஆம் ஆண்டு தேர்தலில் இந்த மண்ணில் திமுக கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்