தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லாம் தவறான சித்திரிப்பு: துரை வைகோ திட்டவட்டம்

1 mins read
f86047f0-c980-4458-aa67-bc84ce37a503
துரை வைகோ. - படம்: ஊடகம்

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் துரை வைகோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 15ஆம் தேதி திருச்சியில், மதிமுக நடத்தவுள்ள மாநாடு தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கும் என்றார்.

மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், அக்கட்சி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் நிலவுகிறது.

ஆனால், இது தொடர்பாக மதிமுகவின் கோரிக்கையை திமுக தலைமை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவும் திமுக தலைமை முன்வரவில்லை. எனவே, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், “அங்கீகாரம் பெறுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதி கேட்பது எங்கள் ஆசை ஆனால் இறுதி முடிவை கூட்டணிக் கட்சிகளுடன் பேசி, மதிமுக தலைமைதான் முடிவு எடுக்கும்,” என்றார் துரை வைகோ.

“அதேசமயம் நாங்கள் இத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். இத்தனை தொகுதிகளைக் கேட்டு கோரிக்கை வைத்தோம் என்பதெல்லாம் தவறான சித்திரிப்பு.

“திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை இயன்றவரை நிறைவேற்றி உள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும்,” என்றார் துரை வைகோ.

குறிப்புச் சொற்கள்