சென்னை: குட்கா வழக்கு சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் வரும் அக்டோபர் 14ஆம் தேதி நேரில் முன்னிலையாகுமாறு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் போதை பாக்கு, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இத்தடையை மீறி அப்பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக சிபிஐ காவல் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.
தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆறு பேர் மீது பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கலானது. இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன், காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மேலும் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணையின் முடிவில் அவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கலானது.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் முன்னிலையாக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் 20,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பென்-டிரைவ் மூலம் தாக்கல் செய்துள்ளது சிபிஐ.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முக்கியமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.