திருக்கழுக்குன்றத்தில் அதிமுகவினர் கைதுசெய்யப்பட்டதால் பரபரப்பு

1 mins read
8724a1b5-d66e-4a68-afc4-977905fadeba
திருக்கழுக்குன்றத்தில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை காவலர்கள் தடுத்து நிறுத்தி பேருந்தில் ஏற்றுகின்றனர். - படம்: இந்து தமிழ் திசை

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளர் மற்றும் அவரது உறவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை, திருக்கழுக்குன்றம், அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுகத்தைக் கைது செய்தது.

முன்னதாக, பேரூர் செயலாளர் தினேஷ்குமாரும் அவரது உறவினர் மோகனும் மோதிக்கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டதால் கடுமையாகக் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (33), திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த கெளரி சங்கர் (எ) அப்பு (29) ஆகியோரைக் கைது செய்தனர்.

அதிமுகவினர் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அனுமதி இல்லாததால் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் உள்ளிட்ட அதிமுகவினரை காவலர்கள், அவரது வீட்டில் வைத்து கைது செய்ய முயன்றதால் காவலர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் திருக்கழுக்குன்றம் நோக்கி வரும் அதிமுகவினர், தடுத்து நிறுத்தப்பட்டு காவலர்களால் கைது செய்யப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்