வரவுகளை மிஞ்சிய செலவு; தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிப்பு

வரவுகளை மிஞ்சிய செலவு; தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிப்பு

கோப்புப் படம்: தினமணி

20 Sep 2026 - 8:49 pm

2 mins read

சென்னை: நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) தமிழகத்தின் மொத்த வருவாயைவிடச் செலவினங்கள் அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக, அரசுக்கு ரூ.20,349 கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த ஐந்து மாதங்களில், மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ. 1,17,791 கோடியாகப் பதிவான நிலையில், ஜிஎஸ்டி மூலம் ரூ.34,144.06 கோடியும் வணிக வரி மூலம் ரூ.28,164.79 கோடியும் மத்திய அரசு அளித்துள்ள வரிப் பங்கு மூலம் ரூ.24,188 கோடியும் கிடைத்துள்ளது.

மேலும், முத்திரைத்தாள், பத்திரப்பதிவு மூலம் ரூ.10,493.30 கோடி பெற்றுள்ள தமிழக அரசுக்கு, இதர வரிகள், தீர்வைகள் மூலம் ரூ.6,843 கோடி கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடன்களுக்கான வட்டி உள்ளிட்ட மொத்த செலவினங்கள் ரூ.1,38,140 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் பழைய கடன்களுக்கான வட்டியாக ரூ. 25,991 கோடியும் ஓய்வூதியத் தொகையாக ரூ. 21,008 கோடியும் செலுத்தப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களின் ஊதியம், நலத்திட்டங்களுக்கான மானியங்கள், வளர்ச்சிப் பணிகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால், வருவாயை விடச் செலவு அதிகரித்துள்ளது.

இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டவும் செலவினங்களைச் சமாளிக்கவும், கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழ்நாடு அரசு ரூ. 30,021 கோடி கடன் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சிக் காலத்தில் திமுக அரசு தேவையின்றி அதிக அளவு கடன் வாங்கிச் செலவிட்டதால் மாநில அரசின் கடன் சுமை கடுமையாக அதிகரித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி இருந்தன.

தற்போது தவெக தலைமையிலான அரசும் வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக கடன்களைப் பெறத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் கடன் சுமை மேலும் ரூ.30 ஆயிரம் கோடி அதிகரித்திருப்பதாக வெளியான தகவல் பேசுபொருளாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்