தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆடை ஏற்றுமதி வருவாய் ரூ.40,000 கோடியைத் தாண்டும்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

2 mins read
f2bf2817-0846-459e-a6ea-d7e509845951
பல நாடுகளுடன் தடையற்ற ஒப்பந்தம் போடுவதற்கு இந்தியா முயற்சி எடுத்துவருவதால் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: இந்தியா பின்னலாடை உற்பத்தியில் 2024-25 நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) நிறுவனருமான ஏ. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ஆடை ஏற்றுமதிச் சந்தையில், 3.9 விழுக்காட்டுப் பங்குடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி வருவாயைவிட இவ்வாண்டில் அதிகமாய் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“உள்நாட்டு நுகர்வுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள ஆடைகளை வழங்குவதுடன், 15 முதல் 18 விழுக்காடு என்ற அளவில் வளர்ந்துவரும் திருப்பூர், கடந்த ஆண்டு சுமார் ரூ.35,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி வருவாயைக் கொண்டிருந்தது. இவ்வாண்டில் ரூ. 40,000 கோடியையும் கடக்கும்.

“பின்னலாடை ஏற்றுமதியில் 54 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கைக் கொண்ட திருப்பூரில், கொரோனா தொற்று, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், தொழிலாளர் பற்றாக்குறை, ரஷ்யா - உக்ரேன் மோதல், மேற்கத்திய சந்தைகளில் பொருளியல் மந்தநிலை முதலான பிரச்சினைகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

“இருப்பினும், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்றும் வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை உள்ளிட்ட வர்த்தக இயக்கவியல் மாற்றத்தால், திருப்பூர் ஏற்றுமதியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம்.

திருப்பூரின் உற்பத்தியில் 35 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி நிறுவனங்களுக்கும் , மற்றொரு 35 விழுக்காடு அமெரிக்காவுக்கும், சுமார் 10 விழுக்காடு மத்திய கிழக்கு மற்றும் கனடாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்