தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் விரிவாக்கம்

1 mins read
878a521d-7762-4b7a-8d10-fccee8ea12b9
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 30) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். - படம்: தமிழக ஊடகம்

தூத்துக்குடி: தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 30) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, அத்திட்டத்தின்மூலம் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் மட்டும் பயன்பெற்று வந்த நிலையில், இப்போது அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, தற்போது உயர்கல்வி பயிலும் 75,028 மாணவிகள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பங்கள் மீதான நிதிச்சுமைகளைக் குறைப்பதையும் பெண்களை இளவயதிலேயே மணமுடித்துத் தருவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவித்தொகை நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, நிதிக் கட்டுப்பாடின்றி கல்வியைத் தொடர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

தூத்துக்குடியில் ‘டைடல்’ பூங்கா திறப்பு

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று தூத்துக்குடியில் ரூ.32.50 கோடி செலவில் 63,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை (டைடல் பார்க்) முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ஐந்து தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள அத்தொழில் வளாகத்தில் வாகன நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்வசதி எனப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்