சென்னை: சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் புறப்பாடு பயணிகளுக்கு முக அடையாளத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் ‘டிஜி யாத்ரா’ (DigiYatra) சோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் முதல் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இச்சேவை, நவம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக வெளிநாட்டுப் பயணிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சென்னையிலிருந்து துபாய், கொழும்பு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இச்சேவை டிசம்பர் 31ஆம் தேதி வரை இரு மாதங்களுக்கு நீடிக்கும்.
சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட ஏழு முக்கிய விமான நிலையங்களில் இச்சோதனை முயற்சி இடம்பெற்றுள்ளது. மின்-கடப்பிதழ் (e-Passport) வைத்திருக்கும் தகுதியுள்ள இந்தியப் பயணிகள், ‘டிஜி யாத்ரா’ செயலி மூலம் தங்களின் மின்னிலக்க அடையாளத்தை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
கைப்பேசியின் என்எஃப்சி (NFC) தொழில்நுட்பம் வாயிலாகக் கடப்பிதழின் மின்னணு சில்லு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, பயணிகளின் விவரங்கள் அவர்களின் கைப்பேசி மின்னிலக்க சேமிப்பகத்தில் பாதுகாப்பாகச் சேர்க்கப்படும்.
பயணிகளுக்கு உதவ ‘டிஜி படீஸ்’ (Digi Buddies) எனப்படும் சிறப்பு வழிகாட்டிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மின்னிலக்க நுழைவுச் சோதனை நடைமுறைக்கு வந்தபோதும், விமான நிறுவனங்களின் கட்டாய ஆவணச் சரிபார்ப்பு, குடிநுழைவுத் துறைச் சோதனைகள் வழக்கம் போல் தொடரும்.
ஏற்கெனவே அங்குச் செயல்பாட்டில் உள்ள ‘ஃபாஸ்ட் டிராக்’ குடிநுழைவுச் சோதனையுடன் இத்திட்டமும் இணைவதால், பயணிகள் நுழைவு வாயில் முதல் பாதுகாப்புப் பகுதி வரை விரைவாகச் செல்ல முடியும்.
தற்போது இந்தியாவில் 39 விமான நிலையங்களில் உள்நாட்டுப் பயணிகளுக்கு வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்தத் தொழில்நுட்பம், பயணிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, வரும் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து அனைத்துலகப் புறப்பாடுகளுக்கும் முழுமையாக விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
39 உள்நாட்டு விமான நிலையங்களில் 2.65 கோடி பயனாளர்களுடன் 11 கோடிக்கும் அதிகமான பயணங்கள் டிஜியாத்ரா தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகியுள்ளது. 2027க்குள் மேலும் 25 விமான நிலையங்களில் இச்சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
இண்டிகோ நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, அனைத்துலகப் பயணிகளின் புறப்பாடு நடைமுறைகளை எளிதாக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
