சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய திமுக அமைச்சர்கள் சிலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. அதேபோல ஆளும் கட்சியான திமுக இத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. முக்கியமான அமைச்சர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்விகண்ட நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மூத்த அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
அமைச்சர் கே.என். நேரு (திருச்சி மேற்கு) வாக்குகள் எண்ணப்பட்டபோது, பத்து சுற்றுகள் வரை பின்தங்கியிருந்தார். அதன் பிறகு, முன்னிலை பெற்று இறுதியில் வெற்றி பெற்றார்.
ஐ.பெரியசாமி (ஆத்தூர், திண்டுக்கல்), எ.வ.வேலு (திருவண்ணாமலை), எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (குறிஞ்சிப்பாடி), சாத்தூர் ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம்தென்னரசு (திருச்சுழி) ஆகிய மூத்த அமைச்சர்களும் தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்தபோதும், இறுதியில் வெற்றி பெற்றனர்.
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), சிவசங்கர் (குன்னம்), பி.கே.சேகர் பாபு (துறைமுகம்), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), கீதா ஜீவன் (தூத்துக்குடி), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), பி.மூர்த்தி (மதுரை கிழக்கு), மா.சுப்பிரமணியம் (சைதாப்பேட்டை), தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்) ஆகியோர் தோல்வி கண்டனர்.
திமுக ஆட்சியில் சட்டமன்றத் தலைவராக இருந்த அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
தொடர்புடைய செய்திகள்
திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தோல்வியுற்றார். அந்தத் தொகுதியில் தவெகவின் பி. வெங்கட்ரமணன் 70,070 வாக்குகள் பெற்று வாகை சூடியுள்ளார். இரண்டாம் நிலையில் வந்த திமுக வேட்பாளர் தா.வேலுவைவிட அவர் 28,972 வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தோல்வியைச் சந்தித்துள்ளார். அந்தத் தொகுதியில் தவெக வேட்பாளார் பி.செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.
விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். எனினும், வாக்குகள் எண்ணப்பட்டபோது பல சுற்றுகளில் அவர் பின்தங்கியிருந்தார்.
தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌம்யா அன்புமணி வெற்றிபெற்றார்.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீமான் வைப்புத்தொகையை இழந்துவிட்டார். அங்கு தவெக வேட்பாளர் டாக்டர் டி.கே.பிரபு 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

