சென்னை: தோல்வியும் துரோகமும் திமுகவுக்குப் புதிதன்று என்றும் தவெக கூட்டணிக்குச் சென்றதன் மூலம் திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் கட்சி பச்சைத் துரோகம் செய்துவிட்டது என்றும் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், எப்போதெல்லாம் காங்கிரசுக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் திமுக உற்ற தோழமையாக உடனிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குத் திமுக கொடுத்த விலை அதிகம் என்றும் ஆனால், அதை இன்முகத்தோடு திமுக ஏற்றுக்கொண்டது என்றும் திரு பாலு தெரிவித்துள்ளார்.
“சமயச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற ஐந்து எம்எல்ஏக்களைப் பணயம் வைத்துக் கயமையுடன் மாற்று அணிக்குச் சென்றுள்ளனர். பெரிய அரசியல், அரச தந்திர முடிவை எடுத்ததுபோல அதற்குக் கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயல்கிறது,” என்று டி.ஆர்.பாலு சாடியுள்ளார்.
குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பாஜக பல்வேறு மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் செய்துள்ளது என்று விமர்சித்துள்ள அவர், தோல்வியும் துரோகமும் திமுகவுக்குப் புதிதன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்குத் தெரியும். காலம் பதில் சொல்லும்,” என்று டி.ஆர்.பாலுவின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

