சென்னை: தமிழக நூலகங்களுக்குப் போலி நூல்களை விநியோகித்துப் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து, சென்னையில் உள்ள பதிப்பக உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த நூல்களில், பெரும்பாலானவை போலியானவை என்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ‘அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற நிறுவனத்தின் பெயரில், பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் தமிழகத்தின் பல்வேறு நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை தரமான நூல்கள் அல்ல என்பதும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியாக உருவாக்கப்பட்ட நூல்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திப் போலி நூல்களை விநியோகித்த விவகாரத்தில், அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் என்பவரது மடிப்பாக்கம் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை (நவம்பர் 16) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
