புதுப்பேட்டை: கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில், ரூ.3 கோடி மதிப்புள்ள 9 சென்ட் இடம் போலி ஆவணம் தயார்செய்யப்பட்டு, ஏப்ரல் 4ஆம் தேதி பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகனின் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, தனலட்சுமி என்பவருக்குக் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.
இதையறிந்த சொத்து உரிமையாளர் சிற்றரசு, மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் புதுப்பேட்டை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஹரி கிருஷ்ணன், நாகராஜ், அவரது மனைவி தனலட்சுமி, ஆவண எழுத்தர் சீனுவாசன், புதுப்பேட்டை சார் பதிவாளர் ராஜேஷ் ஆகிய 5 பேர்மீதும் போலியாக ஆவணங்கள் தயாரித்தல், சட்டவிரோதமாகப் பதிவு செய்தல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், திருக்கோவிலூா் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலையப் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் போலி ஆவணங்களைத் தயாரித்து, பத்திரப்பதிவு செய்து பல சொத்துகள் கைமாறியது தொடா்பாக பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. பின்னர் அது தொடர்பாகக் கடந்த மார்ச் 17ஆம் தேதி கோதண்டபாணி சீனுவாசன், 54, என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் கடந்த ஆண்டுகளில் மட்டும் எட்டுக்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகளில் முகவராகச் செயல்பட்டு போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப் பதிவு செய்தது தெரியவந்தது.