தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி வெளிநாடுவாழ் இந்தியர் சான்றிதழ்: சென்னையில் பல இடங்களில் அதிரடிச் சோதனை

2 mins read
8854a82c-c21f-40ba-83be-29a2323d852f
சோதனைகளின்போது ஆவணங்கள், கருவிகள், முத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. - படம்: தி இந்து

சென்னை: மருத்துவப் படிப்பிற்கான இணையவழிக் கலந்தாலோசனையின்போது மாணவர்கள் சிலர் போலி வெளிநாடுவாழ் இந்தியர் (என்ஆர்ஐ) சான்றிதழ் வழங்கியது தொடர்பில் சென்னையிலுள்ள பல கல்வி ஆலோசனை நிலையங்களில் சனிக்கிழமையன்று (ஜனவரி 11) காவல்துறை அதிரடிச் சோதனை நடத்தியது.

வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்க என்ஆர்ஐ ஒதுக்கீடு வழிவகை செய்கிறது. அவ்வகையில், 2024-25 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு என்ஆர்ஐ மாணவர்களுக்கான கலந்தாலோசனையை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) சில மாதங்களுக்குமுன் நடத்தியது.

இந்நிலையில், மாணவர்கள் சிலர் போலியான வெளிநாடுவாழ் இந்தியர் சான்றிதழ் வழங்கியதாக டிஎம்இ சந்தேகப்பட்டது. அது குறித்துக் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், காவல்துறையின் மோசடிப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

விசாரணையில், என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பம் செய்த மாணவர்கள் அனைவரும் ஒரே கல்வி ஆலோசனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, துணை ஆணையர் எம். காயத்ரி தலைமையிலான காவல்துறைக் குழு சென்னையில் பல்லாவரம், போரூர், வேளச்சேரி, சாலிகிராமம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், அசோக் நகர், குன்றத்தூர் ஆகிய இடங்களில் உள்ள எட்டுக் கல்வி ஆலோசனை நிலையங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டது.

அச்சோதனைகளில், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான 105 ஆவணங்கள், 19 முத்திரைகள், 22 கணினிகள், இரண்டு விரலிகள் (பென் டிரைவ்), ஐந்து வன்தகடுகள், கைப்பேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தீர ஆராயப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

முன்னதாக, என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவக் கல்வி பயில்வதற்காகக் குறைந்தது 44 மருத்துவர்கள் போலி என்ஆர்ஐ சான்றிதழ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக டிஎம்இ தெரிவித்திருந்தது.

மேலும், எம்பிபிஎஸ் படிக்க விரும்பிய அறுவர், வெளிநாட்டுத் தூதரகங்களின் பெயரில் போலிச் சான்றிதழ் வழங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் மூவருக்குத் தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர்களது சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்கா, துபாய், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, குவைத் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள், அச்சான்றிதழ்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தின.

குறிப்புச் சொற்கள்