கோவை: பொதுநலன் கருதி, ரூ.32 கோடி மதிப்புள்ள நிலத்தை பொள்ளாச்சி நகராட்சிக்கு நன்கொடையாக வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் சாலைகளை இணைப்பதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலத்தைக் கையகப்படுத்தும் பணி கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியது.
இதே பகுதியில் சாந்தா ஜெயராமன் என்பவரது குடும்பத்துக்குச் சொந்தமாக 80 சென்ட் இடம் உள்ளது. அந்த நிலத்தைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தார் நீதிமன்றத்தை அணுகினர்.
இதையடுத்து, அரசு அதிகாரிகள் சாந்தா ஜெயராமன் குடும்பத்தாருடன் பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். அக்குடும்பத்துக்குச் சொந்தமான 80 சென்ட் இடம் கிடைத்தால் மட்டுமே சாலை அமைக்கும் பணி முழுமை அடையும் என எடுத்துக்கூறினர்.
இதையடுத்து, ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலத்தை சாந்தா ஜெயராமன் குடும்பத்தினர் பொள்ளாச்சி நகராட்சிக்கு தானமாக கொடுக்க முன்வந்தனர். ஏற்கெனவே இந்த நிலத்துக்கு நகராட்சி சார்பில் சுமார் ரூ.49 லட்சம் வரி விதிக்கப்பட்டிருந்தது. அந்த தொகையையும் சாந்தா ஜெயராமன் நகராட்சிக்கு செலுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு திரும்பப் பெறப்படும் என்றார்.
மேலும், தமக்கும் இரு பிள்ளைகளுக்கும் கிடைத்த குடும்பச் சொத்தின் பங்கான ரூ.32 கோடி மதிப்புள்ள நிலத்தை, மக்களின் பயன்பாட்டுக்காக நகராட்சிக்கு தானமாக வழங்கியதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.