குடிசையில் வாழும் பத்மஸ்ரீ விருது பெற்றவரின் குடும்பம்

2 mins read
86f6f214-6a3e-4f99-8d7d-4d12c1b13ef9
பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணனின் குடும்பத்தார். - படம்: தினமலர்

நீலகிரி: பத்ம விருது பெற்ற தமிழகப் பழங்குடியின ஓவியரின் மனைவி நான்கு பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் கடும் சிரமங்களுக்கிடையே வாழ்ந்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் கிருஷ்ணன். இவர் ஆலு குறும்பா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இந்திய அரசு அண்மையில் இவருக்குப் பத்மஸ்ரீ விருது அறிவித்தது.

ஆனால், இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார்.

பழங்குடி இன மக்களின் வாழ்வியலைக் கண்முன் கொண்டு வரும் அழகான ஓவியங்களைத் தீட்டுவதில் கிருஷ்ணன் வல்லவர்.

சடங்குத் திருமணம், கோவில் திருவிழா, இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு ஓவியங்களை இயற்கை நிறமிகளைக் கொண்டும் ஆலம் வேர்களைத் தூரிகைகளாகப் பயன்படுத்தியும் ஓவியங்களைத் தீட்டுவது இவரது சிறப்பம்சம்.

கடந்த 30 ஆண்டுகளாக ஓவியங்கள் மூலம் மக்களின் கவனம் ஈர்த்த கிருஷ்ணன், இயற்கை முறை ஓவியங்களுக்காக பதினேழு முறை டெல்லி சென்று பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

மண்ணின் மைந்தர்களது வாழ்வியலை அழகுற எடுத்துக் கூறிய கிருஷ்ணனின் சிறந்த பணியைப் பாராட்டும் வகையில், இந்திய அரசு அண்மையில் பத்மஸ்ரீ விருது அறிவித்தது.

இவரது ஓவியங்கள் உலகம் முழுவதும் சென்றடைந்தாலும் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இவரது குடும்பத்தாரைச் சென்றடையவில்லை.

கிருஷ்ணனின் மனைவி‌ சுசீலா, தனது‌ நான்கு பிள்ளைகளுடன் ஒரு குடிசை வீட்டில் வறுமை நிலையில் வாழ்ந்து வருகிறார். தனது பிள்ளைகளைக் கூலி வேலை செய்து காப்பாற்றி வரும் சுசீலா, வசதி இல்லாததால் மூத்த மகள் வாசுகி தனது கல்லூரிப் படிப்பை ஒரே மாதத்தில் நிறுத்தி‌விட்டதாக வேதனை தெரிவித்தார்.

இவரது மகன் ராகுல் மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி விடுதியிலும் 7ஆம் வகுப்பு‌ படிக்கும் மகள்கள் கீதா மற்றும் 4ஆம் வகுப்பு படிக்கும் கீர்த்திகா அரசு விடுதியிலும் தங்கிப் படித்து வருகின்றனர்.

தனது தந்தைக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது குறித்து எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் படிக்க ஆசை இருந்தும் வசதி இல்லாததால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என்றும் கிருஷ்ணனின் மூத்த மகள் வாசுகி தெரிவித்துள்ளார்.

தாங்கள் வசிக்க வீடும் படிப்பதற்கு உதவியும் கிடைத்தால் தந்தையைப் போல் ஏதாவது ஒரு துறையில் தங்களாலும் சாதிக்க முடியும் என்கிறார் வாசுகி.

குறிப்புச் சொற்கள்