தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருச்சியில் பெய்த தொடர் கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

2 mins read
17f80646-d2f7-4615-ac5c-ca42a804848e
திருச்சி மாவட்டங்களில் தொடர்ந்து மழை. - படம்: ஊடகம்

திருச்சி: திருச்சியில் பெய்த தொடர் கனமழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழை நீடிக்கும் என்பதால் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது.

இது படிப்படியாக வலுவடைந்து தமிழகத்தில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் ஃபெங்கல் புயலுக்குப் பின் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இதன் காரணமாக தென் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த வண்ணம் இருந்தது.

தற்போது உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானால் திருச்சி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே திருச்சியில் பெய்த மழை காரணமாக ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பெய்த தொடர்மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சியில் உள்ள ஏரிகள், நீர்பிடிப்புப் பகுதிகள் என அனைத்திலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் நிரம்பாத ஏரிகள் அனைத்தும் நிரம்பி இருப்பதால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து மழை இருக்கும் என்பதால் திருச்சி மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் தண்ணீரை அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்