திருவாரூர்: எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசியின் சொத்துகளை சேதப்படுத்தியதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், காரியமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த எண்ணெய்க் கிணறுக்கு எதிராகப் போராட்டம் நடந்தது.
திரு பி.ஆர்.பாண்டியன் தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த செல்வராஜ் உட்பட 22 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு, எண்ணெய்க் கிணறுக்குரிய பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விக்கிரபாண்டியம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
மன்னார்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை, சனிக்கிழமை (டிசம்பர் 6) திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் மொத்தம் 22 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களில் இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 20 பேரில் 18 பேரை நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவித்தது. திரு பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.13,000 அபராதமும் திரு செல்வராஜுக்கு 13.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.13,500 அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார். உடன் இருவரும் காவல்துறையினரால் மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த உத்தரவு குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கடும் அதிருப்தி தெரிவித்து, விவசாயிகளுக்கு இது ஒரு கறுப்பு நாள் எனச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

