மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை அருகே நீடூர் கிராமத்தில் அக்கூட்டம் நடைபெற்றது.
காவிரியில் தண்ணீர் வராததாலும் மழை இல்லாததாலும் குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், தற்போது சம்பா பயிர்களும் தண்ணீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மயிலாடுதுறையை வறட்சி மாவட்டமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் பயிர்க் காப்பீடு செலுத்திய அனைவருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குறுவை பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கொள்ளிடம், காவிரி, வீரசோழன், பழவாறு, வெட்டாறு ஆகிய ஆறுகளில் தண்ணீரைத் தேக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சாகுபடிக்கு முன்பே குறுவை, சம்பா ஆகிய இரு போகங்களுக்கும் தலா ரூ.30,000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும், நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள என்பிகேஆர்ஆர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
