விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர் (எஸ்ஏசி)
‘இந்த தகர டப்பா மூஞ்சியை எல்லாம் ரசிக்க முடியுமா?’
- விஜய்யின் ‘ரசிகன்’ படத்திற்கு இப்படியொரு விமர்சனம் எழுதியது பிரபலமான வார இதழ் ஒன்று.
தன்னைப் பற்றி இப்படி வந்த விமர்சனத்தைத் தூர தூக்கிப் போட்டுவிட்டு தன் உழைப்பாலும் தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனின் உழைப்பாலும் தங்கமாய் மிளிர்ந்தார் விஜய்.
விஜய்யின் ரசிகர்களை ஒன்றிணைத்து ‘விஜய் மக்கள் இயக்கம்’ என மாற்றியவர் எஸ்ஏசி.
‘வேலாயுதம்’ படப்பிடிப்பு துவக்க விழா சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. இங்குதான் ‘உன்னால் முடியும்’ என்கிற வாசகத்துடன் அமைந்த ‘விஜய் மக்கள் இயக்கம்’ (விமஇ) கொடியை அறிமுகம் செய்தனர்.
“தொடக்கத்தில்’விமஇ’ தலைவராக ஜெயசீலன் இருந்தவரை அப்பா எஸ்ஏசி, மகன் விஜய் இடையே சுமுகமான உறவு நீடித்தது. ஆனால், புதுவை அரசியல்வாதியான புஸ்ஸி ஆனந்த் வந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவரது பிடிக்குள் சென்றார் விஜய்.
இந்தச் சமயங்களில் மகனைப் பார்க்கக்கூட எஸ்ஏசிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“இதனால் நொந்துபோனார் எஸ்ஏசி. ஒரு கட்டத்தில், விஜய்யின் பாலவாக்கம் வீட்டுக்கு எஸ்ஏசியோ, எஸ்ஏசியின் சாலிகிராமம் வீட்டுக்கு விஜய் வருவதும் போவதும் நின்றது,” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஒரு காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த எஸ்ஏசியும் விஜய்யும், பின்னர் சில காரணங்களால் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு தேடிக் கொண்டனர்.
விஜய்யை அரசியலுக்குக் கொண்டுவர பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுச் செயல்பட்டார் எஸ்ஏசி.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, தமிழக காங்கிரசின் முக்கியப் பொறுப்பைப் பெற விஜய்யை டெல்லிக்கு அனுப்பியதும் எஸ்ஏசிதான்.
இப்படிப் பார்த்துப் பார்த்து மகனுக்கு அரசியலைப் பழக்கிவிட்டார் அப்பா. ஆனால், அறுவடை நேரத்தில் அப்பாவுக்கு அனுமதி மறுத்து ஆனந்த்தை அனுமதித்தார் மகன்.
‘அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், விஜய்யிடம் இருந்து வந்த நெருக்கடியால் ஆனந்த் விலகிக் கொண்டுவிட்டார். இது சரியாக வராது’ என, தான் அரசியல் நடை பழக்கிய விஜய், நடையை மாற்றப் போவதாக எஸ்ஏசி கவலைப்பட்டார்.
இதையே ஒரு பேட்டியில், “பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு அம்மா மீது பிரியம் அதிகம். ஆனால், விஜய் என் மீது பிரியம் கொண்டவர். அதனால் நான் இன்னும் விஜய்யை குழந்தையாக நினைக்கிறேன். அதுதான் சிக்கலோ என்னவோ?” எனச் சோகப் புன்னகையுடன் கூறியுள்ளார் எஸ்ஏசி.
==========================
அப்பாவை அடக்கிய மகன்!
“நீங்கள் மது ஒழிப்பு, போதைக்கு எதிராகப் போராடுறீர்கள். ஆனால் உங்கள் மகன் தமிழ்நாட்டின் சிகரெட் விநியோகிப்பாளராக இருக்கிறாரே?’
- இப்படி ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது வைகோ அசரவில்லை.
“அவர் சிகரெட்டுக்கு மட்டுமா விற்பனை முகவராக உள்ளார்? கோதுமை மாவு உட்பட பல பொருள்களின் விநியோகிப்பாளராக இருக்கிறார். அவர் அரசியல்வாதியா? அவர் தனக்கு ஒரு தொழிலைச் செய்கிறார். இது தவறா?”
- இப்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருப்பிக் கேட்டபோது, கேள்வி எழுப்பியவர்கள் அசந்து போயினர்.
அரசியல் கண்களில் படாமல் தன் மகன் துரை வைகோவை வைத்திருந்தார் வைகோ.
இப்போது திடீரென மகனை உள்ளே கொண்டுவந்து, திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றிபெற வைத்துவிட்டார்.
வைகோவின் தனி அரசியல் பயணத்தில் பல ஆண்டுகாலம் துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டவர் மல்லை சத்யா.
‘என் உயிரைக் கடல் அலையிலிருந்து காப்பாற்றியவர்’ என வைகோவால் பாராட்டப்பட்ட மல்லை சத்யாவுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் வைகோ.
அப்பாவுக்குப் பிறகு கட்சியில் செல்வாக்கு மிகுந்த நபராக இருக்கும் சத்யாவால் தன் அரசியல் பயணத்திற்குச் சிக்கல் வரலாம் எனக் கணக்குப் போட்ட துரை, சத்யா மீது பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்துவதாக முணுமுணுப்பு எழுந்தது.
ஆனால், வைகோ தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்.
ஒரு கட்டத்தில் இருதரப்பையுமே அவரால் சமாளிக்க முடியவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
விளைவு....பழைய வரலாறு திரும்பியது.
ஆம்.....
‘என்னைக் கொலை செய்ய வைகோ முயற்சிக்கிறார்’ என்று சொல்லி, வைகோவை திமுகவில் இருந்து வெளியேற்றினார் திமுக தலைவர் கருணாநிதி.
கட்சிக்குள் தொண்டர்களிடம், குறிப்பாக, இளையர்களிடம் வைகோவுக்குப் பெருகிய செல்வாக்கு தன் மகன் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்திற்கு இடையூறாக அமையக்கூடும் எனக் கணக்குப் போட்டே, இந்தக் கொலைப்பழி குற்றச்சாட்டு வைகோ மீது சுமத்தப்பட்டதாகக் கருத்து நிலவியது.
“விசுவாசத்திற்கு கொலைப்பழிதான் பரிசா?” எனக் கதறி அழுதார் வைகோ.
இன்று... மல்லை சத்யாவுக்கு அதே கதி வந்துள்ளது.
“விசுவாசத்திற்கு கொலைப்பழிதான் பரிசா” என சத்யா கதறிக் கொண்டிருக்கிறார்.
=========================
அப்பாவை வேவு பார்த்த மகன்!
பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டாளிகளைப் போல் செயல்பட்ட அப்பா மருத்துவர் ராமதாஸ், மகன் மருத்துவர் அன்புமணி ஆகிய இருவரும் பகையாளிகள் போல் பகிரங்கமாக மோதி வருகிறார்கள்.
இது ஒரு வகை அதிகாரச் சண்டை, சொத்துப் பிரச்சினை, தேர்தலில் கூட்டணி வைப்பதில் ஏற்பட்ட சிக்கல் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
எது உண்மையோ, பொய்யோ...
ஏறக்குறைய 40 ஆண்டுகளாக, பல்லாயிரம் கிராமங்களுக்குச் சென்று, மக்களைச் சந்தித்து கட்சியை வளர்த்தவர் ராமதாஸ்.
‘இட ஒதுக்கீடு போராட்டம்’ எனும் இலக்கை இன்றும் மாற்றாமல் செயல்பட்டு வருகிறார் ராமதாஸ்.
இளையர் பட்டாளம் அன்புமணி பக்கமும், நடுத்தர வயதினர் ராமதாஸ் பக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
“என் குடும்பத்தினர் கட்சியின் அதிகாரத்திற்குள் வரமாட்டார்கள். அப்படி வந்தால் என்னைப் பொது இடத்தில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம்,” என உறுதி கொடுத்திருந்த ராமதாஸ், தன் மூத்த மகளைக் கட்சிப் பொறுப்புக்குள் கொண்டு வந்தார். மகன் அன்புமணியைக் கொண்டு வந்தார். இப்போது பேரனையும் கொண்டு வந்துள்ளார்.
ராமதாசுக்குப் போட்டியாக அன்புமணியும் தன் மனைவி சௌமியாவை கட்சிக்குள் கொண்டு வந்தார்.
ராமதாசின் எதிர்ப்பை மீறி, பாஜக கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சௌமியாவை நிறுத்தினார் அன்புமணி.
பொதுவாக, திண்டிவனம் தைலாபுரம் தோட்டம்தான் பாமகவின் தலைமையிடம். முக்கிய அரசியல் முடிவுகள், தொண்டர்களுக்கான பயிற்சிப்பட்டறை இங்குதான் நடக்கும்.
இந்த வழக்கத்தை மாற்றி, சென்னை பனையூரில் பாமக அலுவலகத்தை அமைத்தார் அன்புமணி.
‘நான்தான் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் கட்சியின் தலைவர். நீ செயல்தலைவர் மட்டுமே!’ என ராமதாஸ் சொல்கிறார்.
‘நான்தான் இனி கட்சித் தலைவர்’ எனச் சொல்கிறார் அன்புமணி.
‘அப்பாவுக்குப் பிறகு மகன் தலைவராகட்டுமே’ என்கிறது ஒரு தரப்பு
இந்நிலையில் தன் அப்பாவையே நவீன கருவி மூலம் அன்புமணி வேவு பார்த்ததாக வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.