பெரம்பலுார்: ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்த நோயாளியைப் போல் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அண்மையில், பெரம்பலுார் மாவட்டம், கொளக்காநத்தம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அதன் பிறகு தமக்கு முறையான பராமரிப்பு இல்லை என்றும் பல்வேறு சிரமங்களால் தாம் அவதியுறுகிறோம் என்றும் அவர் மாவட்ட ஆட்சியருக்கு தமது ‘வாட்ஸ்அப்’ மூலம் புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தார். அதன்படி, புகாருக்கு ஆளான ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அவர் நேரில் சென்றார். எளிய உடையை அணிந்து சென்றதால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
சுகாதார நிலையத்தில் தமக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அவர் தெரிவிக்க, உடனடியாக அங்கிருந்த ஒரு தாதி ஊசி போட வந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆட்சியர் மிருணாளினி, “என்னைப் பரிசோதிக்காமலேயே எப்படி ஊசி போட வந்தீர்கள்?, மருத்துவர் எங்கே?” என்று கேட்டு, கடிந்துகொண்ட போதுதான், வந்திருப்பது மாவட்ட ஆட்சியர் என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தனர்.
இதையடுத்து, அங்கு மருத்துவப் பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படாததும் மருத்துவர்கள், தாதியர் ஆகியோர் பணி நேரத்தில் அங்கு இல்லாததும் தெரியவந்தது.
அனைவர் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன் பின்னர் சுகாதார நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.