கன்னியாகுமரி: ஞாயிற்றுக்கிழமை 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் வேகத்துடன் எழும்பி வீசியதால் பயங்கர சூறாவளிக் காற்றுடன் கடல் சீற்றமும் காணப்பட்டதால் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சீற்றமாகக் காணப்பட்டன.
இதனால் சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசியதால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு அச்சப்பட்டனர்.
கடலில் இறங்கிய சிலரை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட சுற்றுலா, கடலோரப் பாதுகாப்பு குழும காவலர்கள் அங்கிருந்து வெளியேற்றி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்கக் கடல் பகுதியில் கடுமையான சீற்றம் காணப்பட்டதால் அங்கு செல்வதற்கான படகுப் போக்குவரத்து காலையில் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கடல் வழக்க நிலைக்கு திரும்புவதைப் பொறுத்து படகுப் போக்குவரத்து இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. இது சம்பந்தமான அறிவிப்புப் பலகை படகுத்துறை நுழைவாயிலில் வைக்கப்பட்டு உள்ளது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப்பால பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு ஏற்கெனவே கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.