பெரம்பலூர்: திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பெரம்பலூரில் பதற்றம் நிலவியது.
காவல்துறையின் தடையை மீறி குன்னம் பகுதியில் இரு கட்சியினரும் திரண்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, வன்முறையில் முடிந்தது.
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா அண்மையில் விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது விசிகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆ.ராசாவைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக அறிவித்திருந்தது. எனினும், காவல்துறை இதற்கு அனுமதி தரவில்லை.
இதனிடையே, விசிகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இரண்டு அரசியல் கட்சியினரும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, குன்னம் காவல்துறையினர் இரு தரப்பிற்குமே அனுமதி மறுத்திருந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 26) குன்னம் பகுதியில் இரு கட்சிகளையும் சேர்ந்த ஏராளமானோர் குன்னம் பகுதியில் கூடினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு கட்சித் தொண்டர்களும் கற்களை வீசி, உருட்டுக்கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமரசம் செய்ய முற்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
திரளாகக் கூடியிருந்தவர்கள் விரட்டப்பட்ட நிலையில், குன்னம் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமான கூட்டணிக் கட்சிகளாக இருந்த திமுக, விசிகவுக்கு இடையே திடீர் மோதல் வெடித்திருப்பது இருதரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

