பெரம்பலூரில் திமுக, விசிக கடும் மோதல்

பெரம்பலூரில் திமுக, விசிக கடும் மோதல்

2 mins read
a040c113-f88f-4bff-b504-95dc4dd67b01
குன்னம் பேருந்து நிலையத்திற்கு அருகே விசிகவினரும் திமுகவினரும் ஒருவரையொருவர் கல், கட்டையால் தாக்கிக்கொண்டனர். - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

பெரம்பலூர்: திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பெரம்பலூரில் பதற்றம் நிலவியது.

காவல்துறையின் தடையை மீறிக் குன்னம் பகுதியில் இரு கட்சியினரும் திரண்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, வன்முறையில் முடிந்தது.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா அண்மையில் விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்துச் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது விசிகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆ.ராசாவைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக அறிவித்திருந்தது. எனினும், காவல்துறை அதற்கு அனுமதி தரவில்லை.

இதனிடையே, விசிகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திமுகவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இரண்டு அரசியல் கட்சியினரும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, குன்னம் காவல்துறையினர் இரு தரப்பிற்குமே அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 26) இருகட்சிகளையும் சேர்ந்த ஏராளமானோர் குன்னம் பகுதியில் கூடினர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருகட்சித் தொண்டர்களும் கற்களை வீசி, உருட்டுக்கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர். இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டுச் சமரசம் செய்ய முற்பட்டனர்.

திரளாகக் கூடியிருந்தவர்கள் விரட்டப்பட்ட நிலையில், குன்னம் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குக் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமான கூட்டணிக் கட்சிகளாக இருந்த திமுக, விசிகவுக்கு இடையே திடீர் மோதல் வெடித்திருப்பது இருதரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விசிகதிமுகமோதல்