சென்னை: சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு அவரது திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, கமல் ஆகிய இருவரும் விஜய்யின் வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்த நிலையில், நடிகர் விக்ரம், ‘வாழ்த்துகள் நண்பா, வரலாறு படைத்துவிட்டாய்’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விஜய்யுடன் உள்ள புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் திரு விஜய்க்கு வாழ்த்துகள் என்றும் அவர் திரைத்துறையைச் சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இது வெறும் வெற்றி மட்டுமல்ல என்றும் நம்பிக்கையால் முத்திரையிடப்பட்ட ஒரு புரட்சி என்றும் நடிகர் ரவி மோகன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சூரி கூறுகையில், “இந்த மாபெரும் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விஜய்யும் அவரது குழுவினரும் பொதுச் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற மைல்கற்களை அடைய நல்வாழ்த்துகள்,” என்றார்.
உத்வேகம் தரும் இந்தப் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் விஜய்க்கு மிகுந்த வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துவதாக நடிகை காஜல் அகர்வால் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான, அற்புதமான வெற்றி என்றும் இது இன்னும் பல வெற்றிகளுக்கான தொடக்கம் என்றும் நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறுகையில், ஒரு விரல் புரட்சி நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“விசில் போடு. பலர் பல தசாப்தங்களாக முயன்றுள்ளனர். ஆனால், மக்கள் விரும்பினால், அதிகாரம் அவர்களுடையது என்பதை நிரூபித்துள்ளனர். தமிழர்களின் மாற்றமும் வளமும் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன்,” என்று வரலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ரவி தேஜா, சந்தீப் கிஷன் ஆகியோரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

