சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் ‘இன்ஜின்’ பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்தடையும் வரை அந்த சரக்கு விமானத்தில் எந்தவிதமான தொழில்நுட்பக் கோளாறுகளும் காணப்படவில்லை. எனினும், அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியபோது அதன் ‘இன்ஜின்’ பகுதியில் இருந்து புகை வெளியேறியது.
இதையடுத்து விமானி, விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
விமானம் தரையிறங்கிய அடுத்த நொடியே தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு விமானத்தில் மூண்ட தீ, மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
“விமானத்தில் இருந்து லேசான புகை வந்தது உண்மைதான். எனினும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தீயணைப்புப் படையினர், மீட்புக் குழுவினர் திறம்படச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்,” என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியதாக தமிழக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.