சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு கட்டடத்தில் சனிக்கிழமை காலை திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.
எட்டு மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் பற்றி எரிந்த தீ மளமளவென்று மேல் மாடிகளுக்குப் பரவியது.
அந்த தென்மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் காலைநேரத்தில் ஊழியர்கள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. பணியில் இருந்த ஒருசில ஊழியர்களும் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பத்து வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ முற்றிலுமாக அணைய ஒருசில மணி நேரம் ஆனதாக ஊடகத் தகவல்கள் கூறின.
அந்தத் தீவிபத்தால் அண்ணா சாலை முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் பிஎஸ்என்எல் இணையச் சேவையும் கைப்பேசிச் சேவையும் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இணையச் சேவை பாதிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகங்களின் இணையச் சேவையும் முடங்கியது.
அவற்றுடன், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகாலச் சேவைகளும் பாதிப்புக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பிஎஸ்என்எல் அலுவலகத்தின் ‘சர்வர்’ அறையில் உள்ள கட்டடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என தகவல் வெளியானது.
இருப்பினும், இந்தத் தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திடீரென காலை நேரத்தில் தொலைத்தொடர்பு அலுவலகக் கட்டடத்தில் தீப்பிடித்தது எப்படி என்று அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

