முதல்முறை: ஹெலிகாப்டரில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட இதயம்

2 mins read
4295c670-7627-4ec1-b463-920bc16f9a97
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக சென்னையின் மையப் பகுதிக்குள் ஹெலிகாப்டா் தரையிறக்கப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: கா‌ஷ்மீர் அப்சர்வர்

சென்னை: மூளைச்சாவு அடைந்த இளையர் ஒருவரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு, தஞ்சாவூரிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மகாராஷ்டிர இளையருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டிருக்கிறது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக சென்னை நகரின் மையப் பகுதிக்குள் ஹெலிகாப்டா் தரையிறக்கப்படுவது இதுவே முதன்முறை என்று தினமணி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சோ்ந்த 19 வயது இளையர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். சிகிச்சைப் பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) காலை அவர் மூளைச்சாவு அடைந்தாா். குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது இதயம், சிறுகுடல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனையில் இதய செயலிழப்புக்குள்ளான மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 33 வயது நோயாளி ஒருவருக்குத் தானமாகப் பெறப்பட்ட இதயத்தைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு இதயத்தை விரைந்து எடுத்து வரத் திட்டமிடப்பட்டது. இதற்காக அரும்பாக்கம், டி.ஜி. வைணவ கல்லூரியில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக சிறப்பான வளாகத்தைக் கல்லூரி நிா்வாகம் அமைத்து உதவியது.

அதன்படி, கல்லூரிக்கு வந்தடைந்த உறுப்பை, அங்கிருந்து எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் தடையற்ற போக்குவரத்து வழித்தடத்தை சென்னை பெருநகரக் காவல்துறையினர் உருவாக்கித் தந்தனா்.

இதன் பயனாக இரண்டு நிமடங்களில் மருத்துவமனைக்கு இதயம் சென்றடைந்தது. அங்குத் தயாா்நிலையில் இருந்த இதய மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கே. ஆா். பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், வெற்றிகரமாக நோயாளிக்கு இதயத்தைப் பொருத்தினா்.

சம்பந்தப்பட்ட மகாராஷ்டிர இளையருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்