சென்னை: தமிழகத்தில் 8,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்களை மேற்கொள்ளத் தமிழக அரசும் ‘எல் அண்ட் டி’ நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
மொத்தம் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ள அம்மூன்று திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.15,000 கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோவையில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருள்கள், மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டமும், திருவள்ளூரில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 5,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காட்டுப்பள்ளிக் கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது.
தமிழ்நாட்டில் ‘எல் அண்ட் டி’ நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில் துறையில் வலுவான தடம் பதித்துள்ளதையும் தமிழ்நாட்டில் பரவலாகவும் வெவ்வேறு துறைகளிலும் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்துள்ளதையும் முதல்வர் விஜய் பாராட்டியுள்ளார்.

