சென்னை: பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்குச் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) படிக்க இடம்கிடைத்துள்ளது.
அங்கு கல்வி கற்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ராஜேஸ்வரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பழங்குடி இனமக்கள் கணிசமாக வசிக்கும் கல்வராயன் மலைப் பகுதியில் இவரது வீடு உள்ளது.
ராஜேஸ்வரியின் தந்தை ஆண்டி, தையல் கலைஞர். இவரது மனைவி கவிதா. இத்தம்பதியர்க்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் ஜெகதீஸ்வரி இளங்கலை பட்டப்படிப்பு முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
கடந்த ஆண்டு தந்தையை இழந்ததால் ராஜேஸ்வரியின் சகோதரர் தந்தையின் தொழிலைக் கவனித்துக் கொள்கிறார்.
இந்நிலையில், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார் ராஜேஸ்வரி. 10ஆம் வகுப்புத் தேர்வில் 438 மதிப்பெண்களும் 12ஆம் வகுப்புத் தேர்வில் 521 மதிப்பெண்களும் பெற்ற ராஜேஸ்வரிக்கு பொறியியல் படிக்க ஆசை.
இதையடுத்து, அரசு பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பொறியியல் நுழைவு தேர்வுக்குப் பயிற்சி பெற்ற இவருக்கு, இந்திய அளவில் 417வது இடம் கிடைத்தது.
அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரிக்குச் சென்னை ஐஐடியில் சேர இடம் கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவியாகி சாதித்துள்ள அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.