திருச்சி: தமிழகச் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவின் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட தொல்பொருள்களை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியக் கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகளை, பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தப்படி, மத்திய அரசிடம் ஒப்படைக்க, தொடர்புடைய ஏல நிறுவனங்களும் அருங்காட்சியகங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. அச்சிலைகள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
காணாமல் போன உலோக, கற்சிலைகள் உலகப் புகழ்பெற்ற அரும்பொருளகங்களிலும் ஏல நிறுவனங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்ட, தூதரக முயற்சிகளின் பலனாக, ஆஸ்திரேலியா 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று சிலைகளை திருப்பி அளிக்க ஒப்புக்கொண்டது.
அவை ஆஸ்திரேலியா, கேன்பரா நகரில் உள்ள நேஷனல் கேலரியில் இருக்கும் ₹2 கோடி மதிப்புடைய திரிசூல மங்கள காளி சிலை, திருவாரூர் மாவட்டம் கடுவாங்குடியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ₹4 கோடி மதிப்புடைய நந்தி சிலை, தஞ்சாவூர் மாவட்டம், மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோவிலைச் சேர்ந்த ₹2 கோடி மதிப்புடைய ஆறுமுகம் கொண்ட ஸ்கந்தர் (சுப்பிரமணியர்) கல் சிலை ஆகியவை ஆகும்.
அதேபோல், அமெரிக்கா இரண்டு சிலைகளை ஒப்படைக்க சம்மதித்துள்ளது.
அவை அமெரிக்காவின், தேசிய ஆசிய கலைகள் அரும்பொருளகத்தில் உள்ள (National Museum of Asian Art) கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருள்மிகு நரீஸ்வரர் சிவன் கோயிலுக்கு சொந்தமான சுந்தரமூர்த்தி நாயனார்- பரவையார் நாச்சியார் சிலை, திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள அருள்மிகு விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 12, 13ஆம் நுாற்றாண்டை சேர்ந்த சோமாஸ்கந்தர் சிலைகள் ஆகும்.
தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள், தொன்மையான பொருட்கள், கலை பொருள்களை மீட்கவும் குற்றவாளிகளை கண்டறியவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

