சென்னை: நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டுக்கு ஐந்து தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும், அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும் திருச்சி நிர்வாகத் தலைநகராகவும் கோவை தொழில்,வணிகத் தலைநகராகவும் இருக்கும். கன்னியாகுமரி மெய்யியல் தலைநகராக உருவாக்கப்படும். மதுரை மொழி, கலை, பண்பாட்டு தலைநகரமாகும்.
மேலும் தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் திருச்சிக்கு மாற்றப்படும் என்று சீமான் கூறினார்.
2026 தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை என்று இல்லாமல் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்று வியாழக்கிழமை (மார்ச் 19) கிண்டியில் சீமான் கூறினார்.
மக்களின் கருத்துக்கு ஒரு அரசு இயங்க முடியாது; மக்களின் நலனுக்காக மட்டுமே இயங்க முடியும் என்பதே கொள்கை என்றார் அவர்.
தலைநகரை மாற்றுவோம் தமிழகத்தை மாற்றவோம், அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம், தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம், நீர்வளப் பெருக்கம், தூய குடிநீர் இலவசம், மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் நலன், பெண்ணுரிமை, போக்குவரத்துக் கொள்கை எனப் பல்வேறு தலைப்புகளில் மாற்றங்களை அறிவித்தார்.
மாநில அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்ட மாற்றங்களுக்காக பாடுபடுவோம்.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு, தமிழ் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்படும்.
தொடர்புடைய செய்திகள்
படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
மேலும் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய வாக்குறுதிகள்:
[ο]நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு என தனித் தொகுதிகள் போராடிப் பெறப்படும்.
[ο]மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது உறுதி செய்யப்படும்.
[ο]தமிழ்நாட்டுக்கு உள்ளே, ரயில்வே நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்.
[ο]மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியைப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
[ο]அதிபரை மக்களே தேர்வு செய்ய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வோம்.
[ο]மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
[ο]1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பயிற்சி முறைக் கல்வி பயிற்றுவிக்கப்படும்.
[ο]பல கோடி பனைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
[ο]குடிநீர் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும். கடலில் வீணாக 2,300 டிஎம்சி மழைநீர் கலப்பதைத் தடுக்கத் திட்டங்கள் வகுக்கப்படும்.
இதுபோன்ற வாக்குறுதிகளைக் கொண்ட, 49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார்.

