ஐந்து ஆண்டுகளும் மருத்துவக் கல்வியை தமிழில் படிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

2 mins read
f1032c2f-3837-42c8-b6f0-4dd660177bd7
மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கல்வியை ஐந்து ஆண்டுகளும் தமிழில் படிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், சம்பந்தப்பட்ட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

“அந்தப் பணிகள் முடிவடைந்து அரசுப் பள்ளியில் படித்து 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி படித்துவரும் மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

“இன்னும் கூடுதலாகப் புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்போம்.

“மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளுமே மாணவர்கள் தமிழில் படிப்பதற்கு சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. இதுதொடர்பாக, தேசிய மருத்துவ மன்றத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் மா.சுப்பிரமணியன்.

தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஜனவரியில்கூட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் கூடுதலான மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைத் தவிர எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் முதல்வர் காலிப்பணியிடங்கள் காலியாக இல்லை என்றார்.

எழும்பூரில் அரசு சார்பில், கருத்தரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அடுத்து மதுரையில் இதேபோன்ற மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், சேலம், கோவையிலும் அடுத்தடுத்து கருத்தரிப்பு மையங்கள் வர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்