சென்னை: மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி திடீரென்று உடைந்ததால் அதில் இருந்த பயணிகள் கடும் பீதியடைந்தனர். எனினும் அந்த விமானம் பின்னர் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
மதுரையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மொத்தம் 76 பயணிகள் இருந்தனர். விமானம் சென்னையை நெருங்கியதும் அதைத் தரையிறக்குவதற்கான நடைமுறையைப் பின்பற்றினார் தலைமை விமானி.
அப்போது திடீரென விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. முன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதைக் கவனித்த விமானி உடனடியாக விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமான நிலையத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
பின்னர் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கண்ணாடியை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கண்ணாடி ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் தெரியாத நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட இருந்த அந்த விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ அறிவித்தது. இதனால் மதுரை செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்குள்ளாயினர். அவர்களுக்கு மாற்று பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது.