தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெல்லை தாமிரபரணியில் வெள்ளம்; மீட்புப் பணியினர் குவிப்பு

1 mins read
19229cbb-81f3-43ee-b2e1-618b15c2ed04
நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க அங்கு மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். - படம்: ஊடகம்

நெல்லை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை கொட்டுகிறது. அதையடுத்து, அந்த மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, பாபநாசம், தாமிரபரணி ஆறுகள் என நெல்லை மாவட்டத்தின் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பாபநாசம் அணையில் இருந்து 2,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் தாமிரபரணி ஆற்றில் 56 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் சிக்கியவர்களையும் மீட்க மீட்புக் குழுவினர் முக்கூடலில் முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக் கழகங்களின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கூடுதாழை, உவரி, இடிந்தகரை, குத்தன்குழி, பெருமணல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 8,000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 1,500க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆற்றோரப் பகுதிகளில் சாலைப்போக்குவரத்து முடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்