தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம்: விஜய்யுடன் உயர்மட்டக்குழு சந்திப்பு

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம்: விஜய்யுடன் உயர்மட்டக்குழு சந்திப்பு

2 mins read
fafe0f2a-7a22-40a2-8896-6d5438a49d56
ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசினர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக முதல்வர் விஜய்யை அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனத்தினர் சந்தித்துப் பேசினர்.

அப்போது சென்னை அருகே உள்ள மறைமலை நகர் ஆலையில் உற்பத்தி, விரிவாக்க நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளும்படி ஃபோர்டு குழுவினரிடம் கேட்டுக் கொண்டதாகத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பேசியதாகவும் அப்போது ஃபோர்டு நிறுவனம், தமிழகத்தில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், ஆலோசிக்கப்பட்டதாகத் தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வருங்காலத்தில் உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் இருதரப்பும் ஆலோசித்தன.

ஃபோர்டு நிறுவனத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான முப்பது ஆண்டுகால உறவை முதல்வர் விஜய் நினைவுகூர்ந்தார் என்றும் விரைவில் அந்நிறுவனம் மேற்கொள்ள உள்ள உற்பத்தித் திட்டத்துக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என உறுதியளித்தார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறைமலைநகர் உற்பத்தி ஆலையை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தனது உற்பத்தியையும் விரிவாக்கத் திட்டங்களையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் சில முக்கியமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சென்னையில் மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் அமைக்கப்பட்டு, 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், கோயம்புத்தூரிலும் உலகளாவிய திறன் மையத்தை நிறுவியுள்ள நிலையில், மறைமலை நகர் உற்பத்தி ஆலையில், ரூ.3,250 கோடி முதலீடு மற்றும் 600 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்