சென்னை: பிரபல ‘ஃபோர்டு’ நிறுவனம் சென்னையில் மீண்டும் தனது தயாரிப்பு நடவடிக்கைகளை தொடங்க உள்ளது.
சென்னையில் மீண்டும் அந்நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னைக்கு அருகே தனது தொழிற்சாலையை நிறுவி இருந்தது ஃபோர்டு நிறுவனம், ஆனால் பொருளியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் ஏராளமானோர் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.
இந்நிலையில், மீண்டும் அந்த தொழிற்சாலையைத் திறப்பதன் மூலம் தனது ஏற்றுமதி நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய உள்ளது ஃபோர்டு.
இது தொடர்பான அறிவிப்பை அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் தனது நோக்கம் குறித்து அரசாங்கத்துக்கு கடிதம் வழி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, ஃபோர்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் கார்கள் உற்பத்தி நடவடிக்கையை நிறுத்தியது ஃபோர்டு.
முன்னதாக, உள்நாட்டில் கார் விற்பனை அளவை அதிகரிக்கும் முயற்சியில் உள்நாட்டுக் கார் விற்பனையின் எண்ணிக்கையை உயர்த்துவதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து கார் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கும் அடுத்த ஆண்டிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் உலகின் மூன்றாவது ஆகப்பெரிய கார் சந்தையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் போர்டு நிறுவனத்துக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கார் உற்பத்தி நடவடிக்கையை தொடங்குவதன் மூலம் அனைத்துலக சந்தைக்கான கார் ஏற்றுமதியில் கவனம் செலுத்த முடியும் என ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவில் தமிழக அரசுக்கும் கேட்டர்பில்லர் நிறுவனத்துக்கும் இடையே, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

