தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேர்களைத் தேடி தமிழகம் செல்லும் அயலகத் தமிழர்கள்

4 mins read
0970dd67-0075-4a62-a681-472536ea2b82
ஒவ்வோர் ஆண்டும் 200 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கலாசார சுற்றுலாவிற்காகத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. - படம்: ஊடகம்
multi-img1 of 3

வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் உலகத் தமிழர் புலம்பெயர்ந்தோர் தினம் கொண்டாடப்படுகிறது.

2025ஆம் ஆண்டு “எத்திசையும் தமிழணங்கே” என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.

வேர்களை அடைதல் திட்டம்

புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளும் இளம் மாணவர்களும் தாய்த் தமிழ்நாட்டின் பாரம்பரிய வேர்களுடனான தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் 200 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கலாசார சுற்றுலாவிற்காக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது வேர்களை அடைதல் (ரீச்சிங் ரூட்ஸ்) என்பது தமிழ் புலம்பெயர்ந்த இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்படும் இரண்டு வார கலாசார சுற்றுலாத் திட்டமாகும். இது நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் மீண்டும் இணைக்கவும் தலைமுறைகளுக்கு இடையே தொப்புள்கொடி பிணைப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது.

இந்தத் திட்டத்தில் பற்கேற்க சில தகுதி வரம்புகள் உள்ளன. அவற்றை அயலகத் தமிழர் நலத்துறை இணையத்தளத்தில் காணலாம்.

விசா கட்டணங்கள் உட்பட விமானக் கட்டணத்தின் மொத்த செலவையும் தமிழக அரசே ஏற்கும்.

பங்கேற்பாளர்கள் ‘கலாசார தூதர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். ‘சிறந்த பண்பாட்டுத் தூதுவர்’ என்ற விருதும் ஒருவருக்கு வழங்கப்படும்.

வெளிநாட்டுத் தமிழர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிக்க ஏற்பாடு

வெளிநாட்டுத் தமிழர்களுக்குத் தமிழக நாட்டுப்புறக் கலைகளைப் பயிற்றுவிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது தமிழக அரசு.

இயல்பாகத் தோன்றி, இயற்கையோடு இணைந்து, உணர்ச்சியின் உறைவிடமாய் நின்று, மக்களைக் களிப்பில் ஆழ்த்துவதே நாட்டுப்புறக் கலைகளின் தனிச்சிறப்பு.

“அந்த வகையில் தெருக்கூத்து, கரகாட்டம், வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தோற்பாவைக் கூத்து, சிலம்பாட்டம், குறவன்குறத்தி, மயிலாட்டம், கும்மிப்பாட்டு, பொய்க்கால் குதிரை என்று தமிழ்மண்ணின் தனித்துவத்தை உணர்த்தும் நாட்டுப்புறக்கலைகள் ஏராளம். இந்தக் கலைகள் ஒவ்வொன்றும், நமது வீரம் சார்ந்த மரபுகளின் மாண்புகளைப் பறைசாற்றும் அற்புதக் கலைகளாகும்

“தமிழர் கலைகள் சுவடு தெரியாமல் அழிந்துவிடக் கூடாது. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதை மனதிற்கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

“அரசு விழாக்கள், பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டங்களில் நாட்டுப்புறக் கலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தமிழ் மண்ணின் நாட்டுப்புறக் கலைகளை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும்,” என்கின்றனர் கலை, பண்பாட்டு ஆய்வாளர்கள்.

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை

வெளிநாடுகளில் தமிழ் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை உடனே களமிறங்குகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீட்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உதாரணமாக உக்ரேன் - ரஷ்யா போர், இஸ்‌ரேல் - பாலஸ்தீன போர் ஆகியவற்றில் சிக்கித் தவித்த ஏராளமான தமிழர்கள், குறிப்பாக பல மாணவர்கள் மீட்கப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் இத்துறையின் அதிகாரிகள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 2,500 பேரை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டுள்ளது.

மத்திய அரசின் உதவியின்றி இது சாத்தியமாகி இருக்குமா என இன்னொரு தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். எனினும், அரசியலுக்கு அப்பாற்பட்டு, மீட்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் விடும் நிம்மதிப் பெருமூச்சே சமூகத்துக்குத் தேவையான தென்றல் காற்று.

அயலகத் தமிழர் தின விழாவில் கலாசாரம், பொருளியல், கல்வி - திறன் மேம்பாடு போன்ற துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

தொழில்முனைவு, வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள், மருத்துவச் சுற்றுலா, கல்வி, வேலைவாய்ப்புகள், வெளிநாட்டில் தமிழ்மொழி கற்பிப்பது, அயல்நாடுகளில் தமிழ் ஊடகம் போன்ற தலைப்புகளின்கீழ் அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்வது குறித்து இம்முறை ஆலோசிக்கப்பட்டது. அநேகமாக அடுத்த ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படக்கூடும்.

மாணவர்கள், தொழில் நிறுவனங்களுக்கான பயனுள்ள ஏற்பாடுகள்

கல்லூரி மாணவர்களுக்காக மின்வாகனத் தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதி சார்ந்த தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing), உயிரி தொழில்நுட்பம் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றி அங்குள்ள தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் விரிவாக ஆய்வுக் கூட்டங்களில் உரையாற்றினர்.

அதன் அடிப்படையில் இரு நாள் நிகழ்வின்போது பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்த (Reverse Buyer-Seller Meet- RBSM) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் FaMe TN முகவை மற்றும் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புடன் (FIEO) இணைந்து நடத்தப்படுகிறது. இது உலகளாவிய வாங்குபவர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுடன் தமிழகத் தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, இறக்குமதி ஒப்பந்தங்களை ஊக்குவிக்கும்.

மேலும், அதை நிலையான வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக மாறவும் வழிவகுக்கும் என்கிறார்கள் துறை அதிகாரிகள்.

தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழினம் உலகளாவிய இனம்

“தமிழினம் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் அல்ல. உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம்தான்.

“எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்குத் தமிழ்நாடுதான் தாய் வீடு. உங்களை அயலகத்துக்கு வாழப் போனவர்களாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்களாக அயல்நாடுகளில் இருப்பவர்களாக நினைத்து போற்றக் கடமைப்பட்டுள்ளேன்,” என்று 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

தற்போது, ‘வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்த இவ்வாரியத்துக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழர் பண்பாட்டை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய, தமிழ் மொழியைக் கற்பிக்க ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க அனைத்தையும் செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்