வேலூர்: கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில், கடந்த இரு நாள்களில் மட்டும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் ஏறக்குறைய ஐம்பது இடங்களில் காட்டுத்தீ மூண்டது.
அவற்றை அணைப்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் சமயத்தில், பல்வேறு வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது தமிழகத்தில் வழக்கம். எனினும், நடப்பாண்டு நெடுஞ்சாலைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது அதிகரித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி, திருப்பூர், தேனி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 50 இடங்களில் காட்டுத்தீ மூண்டதாக இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிறுவனமானது, தமிழகத்தில் காட்டுத்தீ ஏற்படக்கூடிய பகுதிகளை செயற்கைக்கோள் வாயிலாக தீவிரமாகக் கண்காணித்து அவ்வப்போது உரிய எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
காட்டுத்தீ மூண்ட இடங்கள் குறித்து இந்நிறுவன அதிகாரிகள் வழங்கும் தகவல்களுக்கு ஏற்ப வனத்துறை அதிகாரிகள் தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை 50 இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தந்த மாவட்ட வனப்பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.