சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அமமுக இணைந்தது.
இந்நிலையில் அமமுகவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய மாணிக்கராஜா, “கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் சேர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பலமுறை அமமுக தலைமைக்கு எடுத்துச் சொல்லியும் பயனில்லை. இந்த நிலையில், நல்லாட்சி வழங்கி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் எவ்வித நிபந்தனையும் இன்றி இணைகிறோம்,” என்று கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைவதை தொண்டர்களும் மாவட்டச் செயலாளர்களும் விரும்பவில்லை. அந்தக் கூட்டணியில் இணைவதற்கு எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன என்பது எனக்குத் தெரியவில்லை என்று மாணிக்கராஜா தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் தேர்தலில் அதிமுக மற்றும் அமமுக இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை,” என்று மாணிக்கராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, மாணிக்கராஜா வெள்ளிக்கிழமை காலை திமுகவில் இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமமுக-வின் கட்டுப்பாட்டை மீறிய காரணத்துக்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதன் பின்னர் திமுகவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாணிக்கராஜா இணைந்தார். அவருடன் அமமுக மாவட்டச் செயலாளர்கள் மூவர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அக்கட்சியில் இருந்து மேலும் பலர் திமுகவுக்கு வரக்கூடும் என்றும் அவர் கூறினார்.

