சென்னை: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என எல்லாருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய மாநிலமாகத் தமிழகம் திகழ்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 71 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் ரூ.31,000 கோடி முதலீட்டில் 82,000 வேலைவாய்ப்புகளை வழங்கும் 51 முடிவுற்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து. முதல்வர் முன்னிலையில் மேலும் ரூ.5,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் தொடங்க தேவைப்படும் இயற்கை வளமும் தரமான மனித வளமும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்பதால் 35 மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெறுவதாக தெரிவித்த அவர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நீலகிரியில் சுற்றுலா முதலீட்டுப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்பி.ராஜா பேசுகையில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட 1,179 ஒப்பந்தங்களில் 867 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
எவ்வளவு முதலீடு கிடைக்கிறது என்பதைவிட எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என்பதுதான் முக்கியம் என்றார் அவர்.

