சென்னை: சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா தொடங்கப்பட்டது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
தமிநாட்டின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த பாரம்பரிய சுவைமிக்க உணவுகளான ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் பிரியாணி, கொங்கு நாட்டு மட்டன் பிரியாணி, விருதுநகர் பரோட்டா, கடலூர் மீன் புட்டு, கருவாடு சூப், அரியலூர் தோசை, மயிலாடுதுறை இறால் வடை, சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி, நீலகிரி ராகி களி, தூத்துக்குடியின் யாழ் உணவுகள் உள்ளிட்ட 235க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெறுகின்றன.
இது தவிர சமைக்காத உணவுகள், பனை பொருள்கள், 90ஆம் ஆண்டு காலகட்ட நினைவுகளைத் தூண்டும் தின்பண்ட வகைகள், செட்டிநாட்டுப் பலகாரங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ஏதுவாக 12 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், திங்கள், செவ்வாய்க் கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரையும் உணவுத் திருவிழா நடைபெறும்.
பொதுமக்களைக் கவரும் வகையில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மகளிர் குழுவினருக்கு விற்பனை நுணுக்கங்கள் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சிப் பட்டறைகளும் நடைபெறும்.
கடந்த ஆண்டு உணவுத் திருவிழா மெரினா கடற்கரையில் கொண்டாடப்பட்டது.
அப்போது மதுரை கறி தோசை, கன்னியாகுமரி பழம் பொரி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, சிவகங்கை உப்புக்கண்டம் ஆகியவை விற்பனை செய்யப்பட்டன.

